
தீபத் திருநாளாம் தீபாவளி கிட்டத்தட்ட அருகில் வந்து விட்டது. வண்ணமயமான கோலங்களை போட்டு மகிழ்தல், இனிப்புகளை பகிர்ந்து கொள்தல், மகாலட்சுமி தாயாரை பிரார்த்தித்தல், தீபங்களை ஏற்றுதல், மத்தாப்புகள், வெடிகளை கொளுத்தி மகிழ்தல் எனப் பல பல கொண்டாட்டங்களால் உங்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.
உங்கள் குழந்தைகளுக்கோ வெடிகளை வெடித்து நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் கொண்டாடி மகிழ்வதே மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த கொண்டாட்டங்களுக்கு பின்புள்ள பிரச்சினை என்ன.. குப்பைகள் குவிந்து விடும். கவலைப்படாதீர்கள், அதற்கு எளிய வழி இருக்கிறது. நீங்கள் உங்கள் பூங்காவையோ அல்லது மொட்டை மாடியையோ எளிதாக சுத்தம் செய்ய இதோ வழி.
தீங்கான இரசாயனங்களில் இருந்து பாதுகாப்பு பெற இத்தகைய வெடி, மத்தாப்பு கழிவுகளை சுத்தம் செய்யும் போது கையுறைகள் போட்டுக் கொள்வது நல்லது.
1) அழுக்கு மற்றும் தூசுகளை சுத்தம் செய்யுங்கள்
முதலில் ஒரு துடைப்பத்தால் மத்தாப்பு, வெடி எரிந்த பின்பு கிடக்கும் கழிவுத் தாள்கள், கம்பிகள் மற்றும் இதர வெடி மருந்துகளை பெருக்கி ஓரு குப்பைத் தொட்டியில் போடுங்கள். இவற்றால் ஒவ்வாமைகள் ஏற்படலாம் என்பதால் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் இந்த இடத்தை சுத்தம் செய்யும் போது அருகில் வர விடாதீர்கள்.

2) அந்தப் பகுதியை கழுவி விடுங்கள்
நீங்கள் உங்கள் மொட்டை மாடியை சுத்தம் செய்ய, ஒரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 2 தேக்கரண்டி ஃப்ளோர் க்ளீனர் அல்லது டிஸ்வாஷிங் லிக்விட் கலந்து கொள்ளுங்கள். ஒரு துணியை எடுத்து இந்த கரைசலில் முக்கி தரை முழுவதும் நன்கு துடையுங்கள். அதன் பின் சாதாரண தண்ணீர் ஒரு பக்கெட் எடுத்துக் கொண்டு மீண்டும் அழுக்குகள் அனைத்தையும் நன்கு தேய்த்து அகற்றுங்கள். பூங்காவை சுத்தம் செய்ய, மீதி உள்ள கழிவுகளை அகற்ற அந்த பகுதி முழுவதும் தண்ணீரை ஊற்றி அகற்றி விட்டால் போதும்.
3) கறைகளை அகற்ற எலுமிச்சையை பயன்படுத்துங்கள்
பெரும்பாலும் வெடி மருந்து பவுடரால் தரைகளில் கருப்பு கறைகள் ஏற்படலாம். உங்கள் மொட்டை மாடி தரையில் இந்தக் கறைகளை அகற்ற ஒரு ஆற்றல்மிக்க வழி உள்ளது. ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 தேக்கரண்டி டிஸ்வாஷிங் லிக்விடு, 2 மேஜைக்கரண்டி லெமன் ஜூஸ் கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கறைகள் உள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்யுங்கள். ஒரு பிரஷ் பயன்படுத்தி கறைகளை நன்கு தேய்த்து அகற்றி விடுங்கள். பின்பு சாதாரண தண்ணீரால் தரையை கழுவி விட்டு, காற்றில் உலர விடுங்கள்.
4) கடினமான கறைகளுக்கு ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்துங்கள்
கறைகள் தொடர்ந்து இருந்தால் பாதிப்பு உள்ள பகுதியில் ப்ளீச்சிங் பவுடரை தூவி 2 - 3 மணி நேரங்கள் அப்படியே விட்டு விடுங்கள். கறைகளை நன்கு தேய்த்து அகற்ற ஒரு ஃப்ளோர் ஸ்க்ரப்பர் பயன்படுத்துங்கள். சாதாரண தண்ணீரால் மீண்டும் சுத்தம் செய்து காற்றில் உலர விடுங்கள்.
மொட்டை மாடி மற்றும் தோட்டத்தில் வெடி மருந்து கழிவுகள் மற்றும் கறைகள் இல்லாமல் சுத்தம் செய்வது மிக சுலபமாகி விட்டது!